நாட்டில் தற்போது பாரிய பணிப்பகிஷ்கரிப்பு : மக்கள் அவதி

Latest News

அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள அசாதார வரி தீர்மானத்திற்கு எதிராக, 40திற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் இன்று பணிப் பகிஷ்கரிப்பிற்கான அழைப்பை விடுத்துள்ளது.

தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்றைய(15) தினத்தை பணிப்பகிஷ்கரிப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.

இதன்படி, அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள், வீதி அபிவிருத்தி, கல்வி நிர்வாகம், நிலவா அளவை திணைக்களம், வருமான வரி உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களை ​சேர்ந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்கவுள்ளனர்.

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்றைய பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

வங்கி வட்டி வீதத்தை குறைத்தல், 20000 ரூபா வாழ்க்கைச் செலவு நிவாரணத்தை வழங்குதல், மின்சார கட்டணத்தை குறைத்தல், ஓய்வூதிய குறைப்பை உடனடியாக நிறுத்துதல் உள்ளிட்டவை இவர்களின் பிரதான கோரிக்கைகளாக அமைந்துள்ளன.

அதிபர், ஆசிரியர், தாதியர், சுகாதாரச் சேவை, தபால், அரச முகாமைத்துவ சேவைகள், சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் இன்றைய(15) பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், ரயில் சேவைகள் சில பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இன்று காலை 10 அலுவலக ரயில் சேவைகள் மாத்திரமே இயங்கியதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

எனினும், இன்று காலை 8 மணி வரை 20 ரயில் சேவைகள் இடம்பெற்றுள்ளதை ரயில்வே பொது முகாமையாளர் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

அத்துடன், தனியார் மற்றும் போக்குவரத்து சபை பஸ்கள் வழமை போன்று சேவையில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சில சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *