புன்னகையே ஒரு மனிதனுக்கு சிறந்த பொன்நகையாகும். இதை விட சிறந்த நகை இவ் உலகில் இல்லை என்பார்கள். அப்படிபட்ட புன்னகையை தரும் நம் பற்களை வெண்மையாகவும்,ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது நம் கடமைகளில் அதுவும் ஒன்றாகும். என்னதான் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் நாம் வாய்விட்டு சிரிக்கும்போது நம் பற்கள் மஞ்சளாக இருந்தால் அதை பார்த்து முகம் சுளிக்கத்தான் செய்கிறார்கள். இதனால் கூட சில சமயங்களில் நம்பிக்கையும் உடையத்தான் செய்கிறது.
எல்லோருக்கும் அழகான பற்கள் அமைவதில்லை. நமது சுகாதார மற்ற பழக்கவழக்கங்கள் குறிப்பாக வெற்றிலை போடுதல், புகைப்பிடித்தல் போன்றவற்றாலும் நமது உணவு பழக்கத்தாலும் மேலும் போதியளவு ஊட்டச்சத்து இன்மையாலும் நம்மில் பலருக்கு பற்கள் மஞ்சள் ஆகிவிடுகிறது.
சரி நண்பர்களே நீண்ட நாட்களாக உங்களுடைய பற்களில் இருக்கும் மஞ்சள் நிறத்தையும், அதனுள் படிந்திருக்கும் கறையையும் முழுமையாக நீக்க முடியவில்லையா? இதோ உங்களுக்கான டிப்ஸ்.
முதலாவதாக நாம் பேக்கிங் சோடாவை எடுத்து கொள்வோம். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்தில் செய்து அவற்றை நாம் பல் துலக்கும் போது குறிப்பாக காலை,மாலை என இரு வேளையும் இதனை பயன்படுத்தலாம். மேலும் பேக்கிங்சோடாவுடன் எலுமிச்சை சாறு சிறிதளவு கலந்தும் பல் துலக்கலாம். அத்தோடு உப்பும் கலந்து துலக்கினால் இன்னும் சிறந்த நல்ல பலனை பெறலாம்.
அடுத்து எப்போதும் ஆயில்புள்ளிங் பழக்கத்தை எமது தினசரி வேலைகளில் ஒன்றாக செய்யும் பழக்கமாக நாம் மாற்றி கொள்ள வேண்டும். ஆயில் புள்ளிங்கிற்கு தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி 20நிமிடங்கள் வரை வைத்திருந்து நன்றாக கொப்பளிக்க வேண்டும். இது போல் நல்லெண்யை எடுத்தும் இவ்வாறு செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வரும் போது கூட மஞ்சள் கறை நீங்கி விடும்.
பற்களை வெண்மை ஆக்க கடுகு எண்ணையும் பயன்படுத்தலாம். கடுகு எண்ணெய் உடன் சிறிதளவு மஞ்சள் கலந்து பேஸ்ட் போல செய்து பல் துலக்கலாம். கிராம்பு எண்ணெய் கூட பற்களை வெண்மை ஆக்க சிறந்ததொன்றாகும். நாம் பயன்படுத்தும் டூத்பேஸ்டுடன் கலந்து தினமும் துலக்கலாம். சில பழங்களின் தோல்கள் கூட இவற்றுக்கு உதவும். ஆரஞ்சு பழத்தோல்,வாழைப்பழத்தோல்,எலுமிச்சை தோல், போன்றவற்றில் சிற்றிக் அமிலம் உள்ளதால் இவை பாக்டீரியா எதிர்ப்பு பொருளாக தொழிற்பட்டு வெண்மையும் அள்ளித்தரும்.