தினேஷ் கார்த்திற்கு ஐ.சி.சி. கௌரவம்!

சமீபத்தில் ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்திருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னணி வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு புதிய பதவியை வழங்கி ஐ.சி.சி. கௌரவம்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராக அறியப்படுபவர் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக். இவர் நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஓய்வுப் பெறுவதாக அறிவித்திருந்தார். மொத்தம் 257 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக், 4842 ரன்களை குவித்துள்ளார்.

 

இந்த சூழலில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக அமெரிக்காவுக்கு சென்றடைந்தது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்றழைக்கப்படும் ஐ.சி.சி. மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி, டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளர்கள் குழுவை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அக்குழுவில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார்.

டி20 உலகக்கோப்பையில் வர்ணனையாளராக தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளது இதுவே முதல்முறை. பல வகையான உலகக்கோப்பை போட்டிகளில் வீரராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக், தற்போது வர்ணனையாளர் என்ற புதிய அவதாரத்தில் களமிறங்கவுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.