“யார பார்த்தாலும் தள்ளி நிற்கணும் என்பதை உடைத்தெறிந்த ஹீரோ இவர் தான்”-பாடலாசிரியர் சினேகன் பேச்சு!

பிரபல திரைப்பட இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘கருடன்’ திரைப்படத்தில் இயக்குநரும், நடிகருமான சசிகுமார், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மே 27) நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய பாடலாசிரியர் சினேகன், “நான் இந்த படத்தில் மூன்று பாடல்களை எழுதியுள்ளேன். இந்த மூன்று பாடல்களை முடிக்கும் வரைக்கும் நான் இயக்குநரை நேரில் பார்க்கவில்லை. செவி வழி செய்திகள் மூலம் தான் நாங்கள் தகவல்களைப் பரிமாறிக் கொண்டோம். இயக்குநர் தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்ததால் நாங்கள் சந்திப்பதற்கான நேரம் கிடைக்கவில்லை.

சூரி திரைத்துறையில் அறிமுகமானாலும், அவருக்குள் இருந்த ஆளுமைகளைக் கண்டுபிடித்தது அண்ணன் இயக்குநர் வெற்றிமாறன் தான். அவருக்கு தான் நாம் எல்லாருமே சேர்ந்து பெரிய நம்பிக்கையைக் கொடுக்கணும். ஹீரோக்கள் அழகாகத்தான் இருக்கணும், ஜூம் பாடியாக தான் இருக்கணும், உயரமாக இருக்கணும், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசணும், யார பார்த்தாலும் கொஞ்சம் தள்ளி நிற்கணும், அப்படி எல்லாம் வரைமுறைகளையும் உடைத்தெறிந்துவிட்டு

எங்க ஊர் திருவிழா கூட்டத்தில் ஒருத்தர் நடந்து வருகிறார்;அவருக்குள் ஒரு ஹீரோ இருக்கிறார். அவர் தான் வெற்றிமாறனின் மிகப்பெரிய ஆளுமை அண்ணன் சூரி அதனை காப்பாற்றியிருக்கிறார்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.