பங்களாதேஷ் அணி உள்நாட்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்துக் கொண்டு, அங்கிருந்து நேராக அமெரிக்கா சென்று அந்த அணி உடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் தற்போது பங்களாதேஷ் அணி அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் தோல்வியடைந்து இருக்கிறது. டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் விதமாக பங்களாதேஷ் அணி நஜிபுல் சாந்தோ தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அமெரிக்க அணிக்கு எதிராக விளையாடிக் வருகிறது.
நேற்று இந்த தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற அமெரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் லிட்டன் தாஸ் 15 பந்தில் 14 ரன்கள், சவுமியா சர்கார் 13 பந்தில் 20 ரன்கள், கேப்டன் நஜீபுல் சாந்தோ 11 பந்தில் மூன்று ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். அனுபவ வீரர் சாகிப் அல் ஹசன் 12 பந்தில் 6 ரன்கள் எடுத்தார்.
இதற்கு அடுத்து இளம் வீரர் தவ்ஹீத் ஹ்ரிடாய் 47 பந்தில் 58 ரன்கள், மகமதுல்லா 22 பந்தில் 31 ரன்கள் எடுக்க, பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. அமெரிக்க அணியின் பந்து வீச்சு தரப்பில் ஸ்டீபன் டைலர் இரண்டு விக்கெட் கைப்பற்றினார். தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்க அணிக்கு ஸ்டீபன் டைலர் 29 பந்தில் 28 ரன்கள், மோனக் பட்டேல் 10 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஆண்ட்ரியஸ் காஸ் 18 பந்தில் 23 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து ஆரோன் ஜோன்ஸ் 12 பந்தில் 4 ரன்கள், என்ஆர் குமார் 10 பந்தில் 10 ரன் கள் எடுத்து வெளியேறினார்கள்.இதைத்தொடர்ந்து அமெரிக்க அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்திருந்தது.
மேற்கொண்டு அந்த அணியில் வெற்றிக்கு ஐந்து ஓவர்களில் 60 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நேரத்தில் நியூசிலாந்து அணிக்கு விளையாடி தற்போது அமெரிக்க அணிக்கு விளையாடும் கோரி ஆண்டர்சன், மற்றும் மும்பையில் பிறந்து வளர்ந்து அமெரிக்க அணிக்கு விளையாடும் 31 வயதான இடது கை சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஹர்மீட் சிங் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
கோரி ஆண்டர்சன் 24 பந்தில் 35 ரன்கள், ஹர்மீட் சிங் 13 பந்தில் 33 ரன்கள் எடுக்க, 3 பந்துகள் மீதம் வைத்து பங்களாதேஷ் அணியை அமெரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆச்சரியப்படுத்தியது!