கடந்த காலங்களில் பல சர்ச்சைகளில் சிக்கிவந்த பவர் ஸ்டார் உடல் நலக்குறைவு காரணமாக நடிப்பதில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் ராமநாதபுரம் தேவிபட்டினத்தை சேர்ந்த முனியசாமி என்பவர் கடந்த 2019ம் ஆண்டு தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக கடன் வாங்க முடிவு செய்து, நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது பவர் ஸ்டார், ரூ.15 கோடி கடன் வாங்கித் தருவதாகவும், அதற்கு முன்பணம் மற்றும் ஆவணச் செலவுகளுக்காக ரூ.14 லட்சம் தர வேண்டும் எனவும் கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து முனியசாமி, பவர் ஸ்டாருக்கு ரூ.14 லட்சம் வழங்கியதாகவும், ஆனால் அவர் நீண்ட நாட்களாகியும் கடனை பெற்றுத் தரவில்லை எனவும் தெரிகிறது. இதையடுத்து தொடர்ந்து பணம் குறித்து கேட்ட முனியசாமிக்கு, பவர் ஸ்டார் செக் ஒன்றை கொடுத்துள்ளார். ஆனால் பணம் இன்றி செக் திரும்பியுள்ளது.
இதையடுத்து ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பவர் ஸ்டார் மீது முனியசாமி, செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து பவர் ஸ்டார் ஆஜராகாத நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நீதிமன்றத்தில் சரணடைந்த பவர் ஸ்டார் சீனிவாசன் தன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இந்த வழக்கை சுமூகமாக தீர்க்க தான் விரும்புவதாகவும் ஆனால் தன்னை தொடர்ந்து எதிர் தரப்பினர் மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த 14 லட்சம் என்பது தனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றும் அவர் கூறினார்.
கடந்த வாரம் முனியசாமி தரப்பு வாதம் நிறைவடைந்தது. இந்நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்காக ஆஜராகி வாதாடி வந்த வழக்கறிஞர் வழக்கில் இருந்து விலகினார்.
இதையடுத்து பவர் ஸ்டார் தரப்பில் வாதாடுவதற்காக மற்றொரு வழக்கறிஞர் இன்று (07-05-2024) ஆஜரானதால், விசாரணைக்காக நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
தான் நிறைய படங்களில் நடித்து வருவதால் ரூ.14 லட்சம் தனக்கு ஒரு பொருட்டல்ல என்று கூறியுள்ளார் பவர் ஸ்டார் சீனிவாசன்.