முக்கியமான வரலாற்றுப் படத்தில் மீண்டும் ஹீரோவாகும் சத்தியராஜ்!

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக இருக்கும் திரைப்படத்தில் அவரது வேடத்தில் பிரபல நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாகவும், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் என தகவல்கள் உலாவுகின்றன.

தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி நாயகனாக உயர்ந்து தற்போது குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருபவர் நடிகர் சத்யராஜ்.

கிண்டல் கேலி கொண்ட அவரது பாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவை. அமைதிப்படை போன்ற ஒரு அரசியல் படத்தை இனி தமிழ் சினிமாவில் எடுக்கவே முடியாது என்னும் அளவுக்கு அந்த படத்தில் ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக தனது நடிப்பின் மூலம் பட்டையை கிளப்பி இருப்பார் சத்யராஜ். சமீபத்தில் சில படங்களில் நடித்திருந்த சத்யராஜ் தற்போதும் பிஸியாகவே இருக்கிறார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது. ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்றை மையமாக வைத்து விவேக் ஓபராய் நடித்திருந்த பிஎம் நரேந்திர மோடி, மன் பைரகி, மோடி தி ஜர்னி ஆப் காமன் மேன், மோ ககா கா கவுன் உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தற்போது புதிதாக பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாக இருக்கிறது. பாலிவுட்டில் தயாராகும் இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கும் எனவும், படப்பிடிப்பும் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று படத்தில் சத்யராஜ் நடிப்பது உண்மைதான் எனவும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக இருப்பதாக அவர் தரப்பு விளக்கம் அளித்து இருக்கிறது.