பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது சிஎஸ்கே!

ஐபிஎல் தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டு பிளேசிஸ் 54 ரன்கள் குவித்தார். சென்னை தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளும், துஷார் தேஷ்பாண்டே, சாட்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் – ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். ருதுராஜ் கோல்டன் டக் முறையில் வெளியேறினார். அடுத்து வந்த மிட்செல் 4 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ரச்சின் மற்றும் ரகானே ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இதையும் படியுங்கள்: பெங்களூரு அணி 218 ரன்கள் குவிப்பு: பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெறுமா சென்னை?

அதிரடியாக விளையாடிய ரகானே 33 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த துபே 7 ரன்னிலும் ரச்சின் 61 ரன்னிலும் மிட்செல் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து டோனி மற்றும் ஜடேஜா ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 12 பந்தில் 35 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 6 பந்துக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய நிலையில் கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்சரை பறக்க விட்ட டோனி 2-வது பந்தில் அவுட் ஆனார்.

இறுதியில் சிஎஸ்கே அணி வெற்றி இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியது. 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆர்சிபி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.